பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உணவகம் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிந்த 3 பேரை குழந்தை தொழிலாளர் மீட்புக் குழுவினர் இன்று மீட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்திலுள்ள அங்காடிகள், உணவகங்கள் மற்றும் தொழில் சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையொட்டி அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மீட்கப்படும் சிறார்கள் தங்களது கல்வியை தொடரும் வகையில் சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கல்வியை தொடர செய்கிறது.
இந்நிலையில், ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் உத்தரவின் பேரில், தொழிலாளர் மீட்புக் குழுவினர், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், லேத் பட்டறைகள், ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், பாடாலூர் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் மளிகை கடையில் பணிபுரிந்த 2 சிறுமிகளையம், ஆலத்தூர் கேட் பகுதியில் உள்ள உணவகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவனையும் மீட்டனர்.
தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பாடாலூர் அருகேயுள்ள ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்த செல்வராணி, திருச்சி மாவட்டம், ஊட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த ரேவதி என்பதும், ஆலத்தூர் கேட்டை சேர்ந்த தங்கராஜ் மகன் தனபால் (15) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மீட்கப்பட்ட மூன்று பேரையும் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.