பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் பகுதியில் தொடர் மழையினால் 15 வீடுகள் சேதமடைந்தது. உடனடியாக அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்செரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியும் முதல் அமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் பகுதியில் இன்று பெய்த கனமழையினால் 15 கூரை மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளது. அதாவது பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மை, சவணன், சின்னப்பொண்ணு, அகிலா, வாலிகண்டபுரத்தை சேர்ந்த பாப்பாத்தி, நூர்ஜகான், காரியானூர் மூக்கன், பில்லாங்குளம் நந்தினி ஆகியோரது கூரை வீடுகளும், நெய்குப்பை செல்லம்மாள், அனுக்கூர் தமிழரசி ஆகியோரது ஓட்டு வீடுகளும் வெங்கலம் பிர்கா பகுதியில் 4 கூரை வீடுகளும் தொடர் மழைக்கு சேதம் அடைந்தது.
வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு வாலிகண்டபுரம் வருவாய் அதிகாரி முத்துமுருகன் மற்றும் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரிகள் அரசினால் அறிவிக்கப்பட்ட பேரிடர் கால நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கி வீடுகள் இழந்தவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையில் குன்னம், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்கள் உட்பட இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கும் வருவாய் துறையினர் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.