பெரம்பலூர் :
பணிக்கு செல்லும் பெண்களின் குழந்தகளை பராமரிப்பதற்காக 4 மையங்கள் செயல்பட்டு வருகிறது என கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ் இயங்கும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி மையங்களுக்கு வேலைக்கு செல்லும் தாய்மார்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் 7 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளை கவனிக்கும் வகையில் குழந்தைகள் காப்பகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட 41 அங்கன்வாடி மையங்களில் வேப்பந்தட்டை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலக கட்டுப்பாட்டில் வேப்பந்தட்டை அங்கன்வாடி மையம், வேப்பூர் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலக கட்டுப்பாட்டில் குன்னம் அங்கன்வாடி மையம், ஆலத்தூர் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலக கட்டுப்பாட்டில் பாடாலூர் இந்திரா நகர் அங்கன்வாடி மையம் ஆகிய 3 அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகள் காப்பக திட்டம் மார்ச் 9 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் குழந்தைகள், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்ட அரங்கு அருகேயுள்ள அறையில் மார்ச். 9 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.
ஒவ்வொரு குழந்தைகள் காப்பகத்திலும், தலா 15 குழந்தைகள் வீதம் 60 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு ரூ. 28,000 வீதம் 4 குழந்தைகள் காப்பகத்துக்கு ரூ. 1.12 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இதில், குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள், தலையணைகள், பாய், பாதுகாக்கப்பட்ட குடிநீர் சாதனம், டவல், பேபி சோப், பவுடர், தொட்டில், டெட்டால் உள்ளிட்ட பொருள்கள் பெறப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், இங்குள்ள குழந்தைகளுக்கு சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.
எனவே, பெண் ஊழியர்கள் இந்த குழந்தைகள் காப்பகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பில் தெரிவித்துள்ளார்