பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி பெற்றத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அன்னமங்கலம், அரசலூர், பூலாம்பாடி, கடம்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து இன்று மனு கொடுத்தனர்.
அந்த கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளது:
தமிழகத்தில் அலங்காநல்லூர், சூரியூர், தம்மம்பட்டி, கோக்குடி ஆகிய பகுதிகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடக்கும் இடங்களாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம், டி.களத்தூர், பூலாம்பாடி, கள்ளப்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 40 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளால் நிகழ்ச்சி நடத்த முடியவில்லை.
விசுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம். காளைகளுக்கு பல்வேறு ஊட்ட உணவுகளையும், நடைப் பயிற்சி, நீச்சல் பயிற்சிகள் அளித்து மாதம்தோறும் ரூ. 20 ஆயிரம் செலவழித்து வருகிறோம். ஆனால், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
எனவே, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த, தமிழக அரசிடம் அனுமதி பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.