பெரம்பலூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகளுடன் கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து இவ்வுலகில் அவதரித்த திருநாளான டிச.25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா மக்களுக்கும் விடுதலை நல்வாழ்வு அளித்த இயேசு கிறிஸ்து பிறந்த தினம் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் நகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புனித பனிமயமாதா ஆலயம், பாளையம் அந்தோணியார் ஆலயம், உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடந்தது.
நள்ளிரவு நடந்த இயேசு கிறிஸ்து பிறந்த நற்செய்தி திருப்பலியில் கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். நள்ளிரவு முதல் தொடர்ந்து அதிகாலை வரை தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர், நற்செய்தி திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
சிறப்பு நற்செய்தி திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். சிறுவர்-சிறுமியர்கள் பட்டாசு வெடித்தும், புத்தாடை அணிந்தும் ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை , அன்னமங்கலம், அரசலூர், பாடாலூர், வடக்களூர், திருவாலந்துறை, திருமாந்துறை, தொண்டைமாந்துறை, உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.