விதிமீறல்கள் குறித்து அறிந்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் – மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான க.நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கான சட்ட மன்றப் பொதுத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது.
தேர்தல் விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர் உரிய அனுமதியின்றி வாகனங்களில் கட்சிக்கொடி கட்டியது, சுவர் விளம்பரங்கள் அனுமதியின்றி வரைந்தது, பொது இடங்களில் விளம்பரம் செய்தது குறித்த கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற புகார்களின் அடிப்படையிலும், பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்பு குழுவினர் ஆய்வின்போது கண்டறிந்த வகையிலும் அரசியல் கட்சிகளின் மீது இதுவரை (29.4.2016 வரை) 201 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவினர் மீது 66 வழக்குகளும், திமுகவினர் மீது 43 வழக்குகளும், தேமுதிக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளின் மீது 18 வழக்குகளும், பாட்டாளி மக்கள் கட்சியின் மீது 3 வழக்குகளும், ஐ.ஜே.கே மீது 1 வழக்கும், இதர கட்சிகளின் மீது 6 வழக்குகளும் என மொத்தம் 137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, குன்னம் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அஇஅதிமுகவினர் மீது 40 வழக்குகளும், திமுகவினர் மீது 15 வழக்குகளும், தேமுதிக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் மீது 2 வழக்குகளும், பாட்டாளி மக்கள் கட்சியின் மீது 2 வழக்குகளும், ஐ.ஜே.கே மீது 4 வழக்குகளும், இதர கட்சிகளின் மீத 1 வழக்குகளும் என மொத்தம் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகமொத்தம், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிகளை மீறியது தொடர்பாக இதுவரை 201 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையினை 18004257031 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
தேர்தல் விதிமீறல்களைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் பங்களிப்பும் இன்றியமையாததாகும். எனவே, தங்கள் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் ஏதேனும் முறைகேடுகள் நடப்பதாக அறிந்தால் உடனடியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.