பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில், வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் விஷம் குடித்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் தற்கொலை செய்துகொண்டனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து மகன் முருகேசன் (எ) வீரமுத்து (32). இவர், பெரம்பலூரில் உள்ள தினசரி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், குடும்பத் தகராறில் மனமுடைந்த வீரமுத்து கடந்த 27 ஆம் தேதி விஷம் குடித்துள்ளார். பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூக்கிட்டு விவசாயி சாவு: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகேயுள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் சின்னதம்பி (40) விவசாயி. இவர், கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டாராம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அவரது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து, அவரது மனைவி கவிதா (35) அளித்த புகாரின்பேரில், மருவத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.