பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து நிர்வாக பொறியாளர் அறிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 306 குடியிருப்புகள் மற்றும் அரும்பாவூர் , பூலாம்பாடி பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்க ரூ.61.11 கோடி மதிப்பீட்டில் கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் செங்கரையூர் அருகில் கொள்ளிடம் ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து மின் மோட்டார் மூலம் சுமார் 539.45 கி.மீ நீளத்திற்கு பல்வேறு அளவுள்ள குழாயின் மூலம் நீர் உந்தப்பட்டு வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 40 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளில் சேகரித்து 306 குடியிருப்புகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நாரணமங்கலத்தில் 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி, காரையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி, நாட்டார்மங்கலத்தில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, ஆலம்பாடியில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி, வேப்பந்தட்டையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி, ஆலம்பாடி பிரிவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி, எளம்பலூர் மகாத்மா காந்தி நகரில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 306 குடியிருப்புகள் மற்றும் அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையம், 40 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், மின்மோட்டார் அறை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணிகள் நடைபெற்றுவருகிறது.

மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் 18-க்கு 18 ம் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் செங்கரையூர் தலைமை நீர் ஏற்று நிலையத்திலிருந்து தாப்பாய், நாரணமங்கலம், ஆலம்பாடி தரைமட்ட தொட்டிகள் வழியாக வேப்பந்தட்டை தரைமட்ட தொட்டியை கடந்து கிருஷ்ணாபுரம் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டிவரை 04.06.2015 அன்று குடிநீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போது இத்திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றுவருவதால் குழாயில் உள்ள மாசுக்களை வெளியேற்றி நீரை சுத்தப்படுத்துவதற்காகவும் வேப்பந்தட்டையிலிருந்து கிருஷ்ணாபுரம் வரை செல்லும் குழாய்களை ஸ்திரபடுத்துவதற்காகவும் கிருஷ்ணாபுரம் தரைமட்ட தொட்டியிலிருந்து இருதினங்களாக நீர் வெளியேற்றப்பட்டது.

மேலும் தற்போது கிருஷ்ணாபுரம் தரைமட்ட நீர்தேக்கத்தொட்டியிலிருந்து பூலாம்பாடி பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் 1.5 கி.மீ தூரத்திற்கு சோதனை முறையில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் ஆலம்பாடி தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியிலுந்து மேலப்புலியூர், மகாத்மாகாந்தி நகர் ஆகிய தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது ஆலத்தூர், பெரம்பலூர், ஒன்றியங்களை சார்ந்த 63 குடியிருப்புகளுக்கு சோதனை முறையில் இத்திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!