பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தலைவர் சகுந்தலா தலைமையில் மாவட்ட பஞ்சாயத்து அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சேகர், மாவட்ட பஞ்சாயத்து செயலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழகத்தில் மிகவும் பின் தங்கிய மாவட்ட பெரம்பலூர் மாவட்டத்துக்கு வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கான கட்டிடம், ஆலத்தூர் வட்டாரத்துக்கு வட்டாச்சியர் அலுவலகத்துக்கான கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது.
கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவும், வேளாண் துறையில் தரச்சான்று அலுவலகம் பெரம்பலூரில் அமைக்கவும், வாலிகண்டபுரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டவும் தமிழக அரசை வலியுறுத்துவது.
கீழப்புலியூர் பி.சி., தெருவில் ரூ.1.50 லட்சம் செலவின் மின்மோட்டார் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைப்பது, 2015-2016ம் நிதியாண்டுக்கான மாநில நிதிக்குழு மானியத்தில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய நான்கு பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் ரூ.1 கோடியே 6 லட்சம் செலவில் கிணறு ஆழப்படுத்துதல், தண்ணீர் தொட்டி அமைத்தல், ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் பொருத்துதல், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வது என்பது உட்பட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் வடிவேல், செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்