பெரம்பலூர் மாவட்ட சார்பில் சுமார் 85 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களும், ரூ.6.10 லட்சம் மதிப்பிலான வரைவோலைகளும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்.
வடக்கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கிவருகின்றது. அதுமட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் தங்களால் இயன்ற உதவிகளை பொருளாகவும், நிதியினை வங்கி வரைவோலையாகவும் அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற நிதிஉதவிகளையும், உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், மருந்துபொருட்கள், பிரட் பாக்கெட், பாய் உள்ளிட்ட பொருட்களையும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முறையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவிகள் சென்று சேர்க்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரைவோலைகளும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளின் கூட்டமைப்பு, நகர்மன்றத் தலைவர், வேப்பந்தட்டை வணிகர் சங்கங்கள் மற்றும் இதர தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு நபர்களால், அமைப்புகளால் இதுவரை மொத்தம் ரூ.2.93 மதிப்பிலான வரைவோலைகள் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று(21.12.2015) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் லெப்பைகுடிகாடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் ரூ.1.51லட்சம் மதிப்பிலான காசோலையை அப்பள்ளியின் தாளாளர் அப்துல் சம்பது, முதல்வர் பவுல் மற்றும் மாணவத் தலைவர்கள் வழங்கினர்.
பெரம்பலூர் முன்னாள் படைவீரர்கள் நல அறக்கட்டளை சார்பாக ரூ.16,ஆயிரத்து 350 மதிப்பிலான காசோலையினை அறக்கட்டளையின் தலைவர் க.பெரியசாமி, செயலர் அ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்..
இன்று வழங்கப்பட்ட நிதியுதவியுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 6.10 லட்சம் மதிப்பிலான காசோலைகள் தமிழக முதலமைச்சர் நிவாரண உதவிக்காக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், அனைத்துத்துறை அரசு ஊழியர் சங்கங்கள், பிரஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பொருட்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி வருகிறார்கள்.
இதுவரை 17 லாரிகள் மூலம் சுமார் ரூ.84,33,734 மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று (21.12.2015) அம்மன் ரியல் எஸ்டேட் சார்பில் மனோகரன் ரூ.1லட்சம் மதிப்பிலான 4,125 கிலோ அரிசியினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர; அவர;களின் நிவாரண உதவிக்கு நிதி வழங்க விரும்பும் நபர்கள் “CHIEF MINISTER PUBLIC RELIEF FUND – CHENNAI” என்ற முகவரிக்கு வரைவோலை எடுத்து நிதித்துறை இணைச்சசெயலாளரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கலாம். அல்லது வரைவோலையினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இடமும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.