பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கியதில் 21 ஆடுகள் உடல் கருகி பலியானது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்துக்கண்ணு (45), அழகுவேல்(50), சகோதரர்களான இவர்கள் விவசாயம் செய்து வருவதுடன் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் தொண்டப்பாடி கிராமத்தில் உள்ள தங்களது வயலில் இருவரும் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது இப்பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனைத்தொடர்ந்து 21 ஆடுகளையும் மழையில் நனையாமல் இருப்பதற்காக வயல் பகுதியிலிருந்த ஒரு புளிமரத்தடியில் நிறுத்தி வைத்திருந்ததாக தெரிகிறது. அப்போது மின்னல் தாக்கியதில் 21 ஆடுகளும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இது குறித்து முத்துக்கண்ணு கொடுத்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.