பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசின் உத்தரவின்படி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிப் போட்டி நடைபெற உள்ளது.
இந்த சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்களது சொந்த செலவில் மிதிவண்டி கொண்டு வருதல் வேண்டும். மாணவ, மாணவியர்கள் பள்ளித் தலைமையாசியரிடம் வயது சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும்.
வீரர், வீராங்கனைகள் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
சாதாரண கைப்பிடி கொண்ட மிதிவண்டியாக இருத்தல் வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட மிதிவண்டிகளை பயன்படுத்துதல் கூடாது. மிதிவண்டி போட்டியில் நேரும் எதிர்பாராத விபத்துக்களுக்கும், தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்கு பெறும் மாணவ,மாணவிகளே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.
13 வயதிற்குட்பட்ட (8-ம் வகுப்பு படிக்கும்) மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 10 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. 15 வயதிற்குட்பட்ட (9,10-ம் வகுப்பு படிக்கும்) மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது.
17 வயதிற்குட்பட்ட(11,12-ம் வகுப்பு படிக்கும்) மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் மூன்று பரிசு, சான்றிதழும், முதல் பத்து இடங்களைப் பெறுபவர்களுக்கு போட்டியில் கலந்து கொண்டமைக்கான சான்றிதழ் மட்டும் வழங்கப்படும்.
எனவே, மிதிவண்டிப்போட்டியில் கலந்து கொள்ள அனைத்து பள்ளித்தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்களை பள்ளி, வயது சான்றதழுடன் செப்.15. அன்று காலை 6.00 மணி அளவில் போட்டி துவங்கும் இடத்திற்கு (ஆட்சியர் அலுவலகம்) அனுப்பிவைக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.