பொதுநல வழக்குகளை பணம் சம்பாதிக்கும் தொழிலாக நினைக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கத்தில் தனியார் நர்சரி பள்ளி அடிப்படை வசதிகள் இன்றி செயல்படுவதாக தேவராஜன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்நிலையில் வெள்ளிக்கிழமை விசாரணையின் போது வாட்ஸ் ஆப் மூலம் தேவராஜன் தனக்கு நீதிமன்ற நோட்டீஸ் நகலை அனுப்பியதாகவும், தனது உதவியாளரை மிரட்டியதாகவும் மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார்.இதையடுத்து மனுதாரர் தேவராஜன் நீதிமன்ற கட்டிடத்தை பணம் சம்பாதிக்கும் தொழிலாக நினைப்பதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் பொது நல வழக்கின் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தை விட்டு வேறு தொழிலைப் பார்க்குமாறு கூறினர். இதையடுத்து தேவராஜன் நீதிபதிகளிடமும், மாவட்ட கல்வி அதிகாரியிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.