பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தக் கோரி பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று புதன்கிழமை மாலை ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இணைச்செயலர் ஜி. இளங்கோவன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் ராஜமோகன், மாவட்டச் செயலர் ந. நமச்சிவாசம், மாவட்டத் துணைத்தலைவர் ராஜ்குமார், மாவட்ட இணைச்செயலர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க முன்னாள் இணைச் செயலர் ஜி. சம்பத்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத்தலைவர் பி. தயாளன், மாவட்டச் செயலர் கி. ஆளவந்தார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 7.5.2013-ல் உச்சநீதி மன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள பதவி உயர்வு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
நீதிமன்ற அமலாக்கத்தை கால தாமதம் செய்யும் அலுவலர்களை கண்டிப்பதோடு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாவட்ட பொருளாளர் எம். ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.