பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகம் எதிரே, அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் இன்று நடைபெற்றது.
தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். தொழிலாளர் தொகை ரூ. 4 ஆயிரம் கோடியை திருப்பி அளிக்க வேண்டும்.
ஓய்வூதியர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும். 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களையும், ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டதை அமலாக்க வேண்டும். மத்திய அரசு சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது, மத்திய தொழில் சங்கங்களின் 12 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி சித்திரவேல், சி.ஐ.டி.யூ நிர்வாகி சிங்குராஜ், ஓ.ஐ.டியூ.சி நிர்வாகி ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் சங்க நிர்வாகி விஜயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகி இளங்கோவன் நன்றி கூறினார்.