பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வ.களத்தூர் தர்மாம்பிகை உடனுறை தர்மபுரீஸ்வரர் கோவில் திருப்பணிகள் செய்து, கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மறுகும்பாபிஷேகம் இன்று புதன் கிழமை நடத்துவதாக கோவில் நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். அதற்கு போலீஸ் தரப்பில் கோவில் கோபுரத்தின் மீது 5 பேர் மட்டுமே ஏறவேண்டும், மங்கள இசை இசைக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தனர்.
இதனால் அதிருப்தியடைந்த கோவில் நிர்வாகத்தினர் போலீசாரின் கட்டுப்பாடுகளை கண்டித்து மறுகும்பாபிஷேகம் நடத்துவதை கைவிடுவதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் சிட்ரிக் மேனுவேல் மற்றும் போலீசார் கோவில் முக்கியஸ்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர், விவரம் தெரியாமல் கெடுபிடிக்கு உத்திரவிட்டதற்கு வருத்தம் கோவில் கோபுரம் மீது எத்தனை பேர் வேண்டுமானாலும் ஏறி கும்பாபிஷேக புனிதநீர் ஊற்றலாம் என கட்டுப்பாட்டை தளர்த்தினர். இதனைத்தொடர்ந்து நாளை வியாழக்கிழமை காலை மறுகும்பாபிஷேகம் நடத்த உள்ளதாக கோவில் முக்கியஸ்தர்கள் அறிவித்தனர்.