பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற மாணவிகள உயர்கல்வி கற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகம், அரசுக் கல்லூரி நிர்வாகத்தினர், அரசு தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள், அவர்களது பெற்றோர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு தலைமை சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி வகித்த பேசியதாவது:
அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் அனைவரும் உயர் கல்வி பயில வேண்டும் என்பதற்காக, இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற்றுள்ளவர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டையும், தங்கி பயில விடுதி வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு மாதிரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிக நிர்வாகம், இளங்கலை இயற்பியல், இளங்கலை வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளும், குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு மாதிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை இயற்பியல், இளநிலை வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் பிரிவில் 1,490 மாணவ, மாணவிகளும், முதுகலைப் பிரிவில் 50 மாணவ, மாணவிகளும் சேர்ந்து பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பேசினார்.
இக்கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் நாகராசு, வட்டாட்சியர்கள் சீனிவாசன், சிவா மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.