தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்தும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் வகையில் கல்லூரி சந்தை 25.08.2015 முதல் 27.08.015 முடிய தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
இக்கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ்அஹமது இன்று துவக்கி வைத்தார்.
இக்கல்லூரி சந்தையானது, மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரி மாணவ மாணவியர்களின் மத்தியில் பிரபலப்படுத்தவும், மகளிர் சுய உதவிக்குழுக்களின் விற்பனையை அதிகரித்திடும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் கலை அறிவியல் கல்லூரிகளில் கல்லூரி சந்தை என்ற பெயரில் மூன்று நாட்கள் விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இக்கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தவிர வெளி மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி மற்றும் ஈரோடு போன்ற மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் பங்கேற்று தங்களது விற்பனை பொருட்களை சந்தைப்படுத்தினர்.
மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மகளிர் சுய உதவிக்குழுவினரும் மற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி முறையினை கேட்டுணர்ந்து தங்களது பொருட்களுக்கும் உரிய மதிப்பு கூட்டு முறையை பின்பற்ற வேண்டுமென அறிவுரை வழங்கினார்.
இதில் அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.