பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலைமைக் காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகன் பெருமாள் (38), பெரம்பலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இன்று மாலை வழக்கம் போல் பணியை முடித்து விட்டு, பெரம்பலூரில் இருந்து மங்களமேட்டில் உள்ள காவலர் குடியிருப்பிற்கு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், முருக்கன்குடி பிரிவு பாதைக்கும் மங்களமேட்டிற்கும் இடையே இருச் சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பெருமாள் ஓட்டிச் சென்ற இருச்சக்கரத்தின் மீது மோதியது, இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெருமாள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் மற்றும் டிடிபிஎல் ரோந்து ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாளின் உடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
உயிரிழந்த தலைமைக் காவலர் பெருமாளுக்கு காஞ்சனா(35) என்ற மனைவியும், ஹரிவெங்கடேஷ்(15) என்ற ஒரு மகனும் உள்ளனர்.