பெரம்பலூர் : வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு மண்வளம் காப்பது பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மண், வேதியியல் துறை மற்றும் வேப்பந்தட்டை பருத்தி ஆராச்சி நிலையம் சார்பில் சர்வதேச மண்வள ஆண்டை முன்னிட்டு நடைபெற்றது.
பயிற்சி வகுப்பை தலைமையாசிரியர் சுகுமாறன் துவக்கி வைத்தார். பருத்தி ஆராய்சி நிலைய தலைவர் முனைவர்.கவிமணி, உதவி தலைமையாசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் மண் வளம் காப்பது குறித்து பேசினார்கள்.
மண்ணியல் துறை பேராசிரியர் வடிவேல் பேசும் போது மண் பயிர்களுக்கு ஆதாரமாக இருந்து ஊட்டமளிக்கிறது. குப்பைகள் மற்றும் கழிவுகளை மக்கச்செய்கிறது. நீரிலிருந்து மாசுகளை அகற்றி வடிகட்டுகிறது. கட்டிடங்கள் கட்டுமானத்திற்கு பயன்படுகிறது என மண்ணின் பயன்களை விளக்கி கூறினார்.
மேலும் மண்ணியல் துறை உதவி பேராசிரியர்கள் லதா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செம்மண், கரிசல் மண், வண்டல் மண், மணற்பாங்கான மண், களிமண், குறுமண், சுண்ணாம்பு பாங்கான மண் உள்ளிட்ட மண் மாதிரிகளை காண்பித்து அதன் நயம் மற்றும் வழவழப்பு, பிசுபிசுப்பு போன்ற தன்மைகளை விளக்கி கூறினார்.
இப்பயிற்சியில் 8 ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வேதியல் ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.