பெரம்பலுார் : பெரம்பலுார் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த விவசாயியை தாசில்தார் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலுார் அருகே உள்ள வெங்கனுார் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து,60, இவரது மகன் ராஜ்குமார்,28, என்பவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர் நேற்று காலை 11 மணியளவில் பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்துக்கு தனது மனைவி சரோஜாவுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்த டி.ஆர்.ஓ., மீனாட்சியிடம் செல்லமுத்து வெங்கனுார் கிராமத்தில் உள்ள பாதை பிரச்சனை குறித்தும், சரோஜா, உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் தனது மகன் ராஜ்குமார் திருமணத்துக்கு உதவித்தொகை வழங்கக்கோரியும் மனு கொடுத்தனர்.
மனுவை பெற்ற டி.ஆர்., மீனாட்சி அதை வேப்பந்தட்டை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து தாசில்தார் பாலகிருஷ்ணன் செல்லமுத்துவிடம் விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தாசில்தார் பாலகிருஷ்ணன் விவசாயி பச்சமுத்துவை கன்னத்தில் பளார் என பலமுறை அறைந்துள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பச்சமுத்துவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆட்சியர் தரேஸ் அஹமது விசாரனைக்கு உத்திரவிட்டுள்ளார்.