மருத்துவக்கல்லூரிகள் இல்லாத இடங்களில் மருத்துவமனைகளில் முதுநிலை பட்டயப்படிப்பு தொடங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடத்தை கட்ட அரசு முன்வருமா என பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சேகர், சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து கொண்டிருப்பதாகவும் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் முதன்மை சிகிச்சை பிரிவும், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு யூனிட் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து புதிய கட்டடங்கள் கட்டப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.