பெரம்பலூர் : மழைநீரை பாதுகாக்க, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடக்கை எடுக்க வேண்டுமென, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலர் ஜெ. தங்கதுரை தலைமையில் இன்று நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகிகள் வீர. செங்கோலன், ச. மன்னர் மன்னன், ரத்தினவேலு, சி. கதிர்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஆக. 17 ஆம் தேதி கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது.
செப். 17 முதல் அக். 2 ஆம் தேதி வரை மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் நடத்துவது.
பருவகால மழையை பாதுகாக்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரி, வரத்து வாய்க்கால்களை சீரமைத்து மழைநீரை சேமித்து விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் பூவரசு, இரா. அண்ணாதுரை, ஒன்றியச் செயலர்கள் ந. கிருஷ்ணகுமார், அ. கலையரசன், துணைநிலை அமைப்பாளர்கள் இரா. ஸ்டாலின், பெ. மெய்யன், இளமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஒன்றியச் செயலர் சி. பாஸ்கர் வரவேற்றார். நகர பொருளாளர் தங்க. சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.