பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏரிகள் மற்றும் காட்டாற்று ஓடைகள் தொடர்ந்து கண்கானிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மழையின் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திடும் பொருட்டு அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது மாவட்டம் முழுவதும் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வேப்பூர் ஒன்றியத்திலுள்ள வசிஷ்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளகாளிங்ராயநல்லூர் கிராமத்தில் மழை நீரினால் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளத்தின் மூலம் பாலத்தின் அருகே ஏற்ப்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், மேலும் சாலையின் இரு புறங்களிலும் மண்அரிப்புகள் ஏற்படா வண்ணம் மணல் மூட்டைகளை அடுக்கி சாலையை சீர் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் மழையினால் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அந்த மக்களை அருகிலுள்ள பள்ளிகளிலோ, சமுதாய கூடங்களிலோ தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்ப்படுத்த அந்தந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
அதனை தொடர்ந்து பெண்ணகோணம் பகுதிகளில், மழையின் காரணமாக மேல்நிலைப்பள்ளி அருகே பெருக்கெடுத்து ஒடும் நீரினை சரிசெய்யவும், துங்கபுரம் கால்நடை மருத்துவமனை வளாகம் அருகே தேங்கிய மழைநீரினை உடனடியாக வெளியேற்றிடவும், அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர; உத்தரவிட்டார். எனவே பொதுமக்கள் யாரும் மழை மற்றும் வெள்ளம் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை, மேலும் தகுந்த முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடித்து தேவையற்ற உயிர் மற்றும் பொருட் தேசங்களை தவிர்த்திட வேண்டும் என பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்பொழுது வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.