பெரம்பலூர்: தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையினால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 73 ஏரிகளில் 33 ஏரிகள் முழுவதுமாகவும், 6 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேலாகவும் நீர் நிரம்பியுள்ளது. முழுவதுமாக நீர் நிரம்பியுள்ள நீர்நிலைகளிருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்படுகின்றன. அவ்வாறு வெளியேற்றப்படும் அதிப்படியான உபரிநீர் காரணமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் மழை, வெள்ளத்தினால் பாதிப்பு நிகழாமல் அனைத்து பகுதிகளிலும் தொடர் கண்கானிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்கானிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது இன்று (06.12.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லையான வெள்ளாற்றில் அதிகப்படியான வெள்ளத்தின் காரணமாக உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி சுமார் 11 ஆயிரத்து 400 கனஅடி நீர் வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் வெள்ள நீரானது பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லையான லப்பைக்குடிகாடு, பெண்ணகோணம், ஒகளூர் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக செல்வதினால் அப்பகுதிகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து அகரம்சீகூர் – செந்துறை சாலையில் பள்ளகாளிங்கராயநல்லூர் பகுதியில் சின்னாற்றில் புதியதாக பாலம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதை முன்னிட்டு தற்காலிக தரைப்பாலத்தின் வாயிலாக நடைபெற்று வந்த சாலை போக்குவரத்து கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தின் காரணமாக தடைபடாமல் தொடர்ந்து இயங்கிட மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டுமாய் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் மழையினால் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அந்த மக்களை அருகிலுள்ள பள்ளிகளிலோ, சமுதாய கூடங்களிலோ தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்ப்படுத்த அந்தந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கினார்.
ஆய்வுகளின் போது பொதுப்ணித்துறை உதவிசெயற்பொறியாளர் வேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிச்சாமி, சிவக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.