இது குறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தீபாவளியை யாருக்கும் தீமை ஏற்படாமல், மகிழ்ச்சியாக கொண்டாட, வெடியினால் ஏற்படும் தீய விளைவுகளை குறித்து அனைவரும் உணர வேண்டும். எனவே 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசையை ஏற்படுத்தும் வெடிகளை வெடிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
பட்டாசுகளை வெடிக்கும் பொது கந்தக டைஆக்ஸைடு, நைட்ரஜன், நைட்ரஜன் ஆக்ஸைடு, கன உலோக ஆக்ஸைடு மற்றும் மிதக்கும் நுண் துகள்கள் ஆகியவை காற்றில் கலந்து சுற்றுச்சூழல் மாசு ஏற்ப்படுவதால், கண் எரிச்சல், ஒவ்வாமை, சுவாசக் கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஒளி மற்றும் வண்ணங்களை ஏற்படுத்தும் மத்தாப்புக்களை வெடிக்கலாம்.
போக்குவரத்து அதிகமுள்ள சாலைகள், நெரிசல் மிக்க இடம், மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் போன்ற அமைதிப்பகுதிகளில் வெடிகளை வெடிக்கக் கூடாது. குடிசை மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருள்கள் இருக்கும் இடங்களில் ராக்கெட் போன்ற வெடிகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பட்டாசுகள் வெடிப்பதைக் குறைத்து, அதன் மூலம் ஏழை குழந்தைகளின் படிப்பிற்கு உதவலாம்.“ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகையை” ஒலி மாசை ஏற்படுத்துகின்ற பட்டாசுகளைத் தவிர்த்து வண்ணமிகு ஒளி ஏற்படுத்தும் பட்டாசுகளைக் குறைந்த அளவில் உபயோகித்து வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடி “ஒளிப் பண்டிகையான தீபாவளியை ஒலி மாசற்ற பண்டிகையாக” உங்கள் அனைவருடைய ஒத்துழைப்போடு கொண்டாட உறுதி ஏற்போம். என அதில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.