பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை மங்கலமேடு போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள எறையூர் கிராமத்தில் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எறையூர், பெருமத்தூர், கிளியூர், திட்டக்குடி பார்டர், புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் கொளஞ்சி என்கிற கொளஞ்சிநாதன் (43), என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம் ஆசிரியர் கொளஞ்சிநாதன் கடந்த சில நாட்களாக சில்மிஷத்தில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்து வந்தனர்.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு எவ்வித பலனும் இல்லை என தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் ஆசிரியர் கொளஞ்சிநாதன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இத்தகவலை அந்த மாணவிகள் தனது பெற்றோர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மங்கலமேடு போலீஸில் புகார் செய்தனர். புகாரின்பேரில் மங்கலமேடு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.