பெரம்பலூர்: 19 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பெரம்பலூர் மாவட்ட அணியினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ்அஹமது இன்று மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் அசோசியன் சார்பில் கோயமுத்தூரில் அக்டோபர் 22 முதல் 25 வரை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தமிழகம் முழுவதிலிருந்தும் எட்டு அணிகள் கலந்து கொண்டனர் . இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அணியினர் 4 சுற்றுகளிலும் வெற்றிப் பெற்று இறுதியாக கோயமுத்தூர் அணியினருடன் விளையாடி வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
முதல் சுற்றில் கன்னியாகுமரி அணியினருடன் விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது சுற்றில் அரியலூர்அணியினருடன் விளையாடி 101 ரன்கள் வித்தியாசத்திலும், மூன்றாவது சுற்றில் காஞ்சிபுரம் அணியினருடன் விளையாடி 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.
அரையிறுதியில் திருவண்ணாமலை அணியினருடன் விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினர். இப்போட்டியில் முதலில் விளையாடிய பெரம்பலூர் அணியினர் 14 ஓவரில் 79 ரன்கள் எடுத்தனர். அதனை தொடர்ந்து விளையாடிய கோயமுத்தூர் அணியினர; 13.4 ஓவரில் 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
இதனை தொடர்ந்து கோயமுத்தூர் அணி முதலிடத்திலும், பெரம்பலூர் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். பெரம்பலூர் அணியை சேர்ந்த கார்த்திக்(எ)குணாள் ஆட்டநாயகன் விருதையும், பி.ஜினோ இளஞ்சிறார்விருதையும் பெற்றனர். இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்ததை முன்னிட்டு அடுத்தமாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிளான கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்த மாவட்ட ஆட்சித்தலைவர் அடுத்த மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள போட்டிகளிலும் வெற்றிப்பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பின்போது அணியின் பயிற்சியாளர் பழனிசாமி, பெரம்பலூர் மாவட்ட பள்ளி சிறார்களுக்கான கிரிக்கெட் சங்க செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.