பெரம்பலூர் : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர் அணி வெற்றி பெற்றதற்காக அனைவரையும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பாராட்டினார்.
இந்த ஆண்டு தமிழ்நாடு மாநில அளவிலான அரசு ஊழியர் விளையாட்டு போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற இறகுபந்து மகளிர் பிரிவிற்கான போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அணி தங்கபதக்கமும், தஞ்சாவூர் மகளிர் பிரிவில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அணி வெள்ளி பதக்கமும், கரூரில் நடைபெற்ற மகளிருக்கான கபாடி போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அணி தங்க பதக்கமும், மதுரையில் நடைபெற்ற பெண்களுக்கான தடகள போட்டியில் 4 100மீ ரிலே பிரிவில் பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி வெண்கலப் பதக்கமும், ஆடவர் தளகள பிரிவில் 1000மீ ஓட்டப்பந்தயத்தில் பெரம்பலூர் மாவட்ட அணி தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அரசு ஊழியர் விளையாட்டு வீரர், வீராங்கணைகளுக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது பங்கேற்று வெற்றி பெற்ற வீரர் வீராங்கணைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா, கைப்பந்து பயிற்றுநர் சாந்தி, மற்றும் தடகள பயிற்றுநர் கோகிலா மறறும் அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.