பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மாநில அளவிலான 43 வது ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சியை கடந்த டிச.1 அன்று துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த மூன்று நாள்களாக மிக எழுச்சியுடன் மாணவ,மாணவிகளின் கூட்டம் நிரம்பி வழியும் அளவிற்கு சிறப்பாக கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வந்த கண்காட்சியின் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது.
இக்கண்காட்சியில் வெற்றிபெற்ற படைப்புகளை உருவாக்கிய மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு வெற்றிக் கேடயங்களையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது வழங்கிப் பாராட்டினார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
வரலாற்று சிறப்பு மிக்க இந்த அறிவியல் மற்றும் கணிதக்கண்காட்சி நமது மாவட்டத்தில் முதல்முறையாக அரசுப்பள்ளியில் நடைபெறுவது என்பது நமது மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். இதற்காக இரவு பகல் பாராது உழைத்த அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இக்கண்காட்சியை சுமார் 58,500 க்கும் மேற்ப்பட்ட நபர்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர். இதனை பார்வையிட்டு செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணங்களில் அடுத்த கல்வி ஆண்டில் மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் இது போன்ற கண்காட்சியில் நாமும் கலந்து கொண்டு வெற்றி வாகை சூட வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் தோன்றுமேயானால், இக்கண்காட்சியின் வெற்றி அதில்தான் அடங்கியுள்ளது.
கண்காட்சி நடைபெறும் இப்பள்ளி வளாகத்தின் சுவற்றில் அறிவியல் அறிஞர்களின் புகைப்படங்கள் சித்திரமாக வரையப்பட்டு, அவர்களின் வாழ்க்கை வரலாறும் அவற்றின் அருகே எழுதப்பட்டுள்ளது. இக்காட்சியை பார;வையிடும் ஒவ்வொரு மாணவனின் சிந்தனையிலும், பல ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற அறிவியல் கண்காட்சியை அன்றைய மாணவர;கள் பார;வையிடும் போது நமது படமும் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் பதியவேண்டும். இச்சிறு தீப்பொறிதான் இன்றைய கால மாணவ, மாணவிகளுக்கு பெரிய தூண்டுகோலாக அமையும், என இவ்வாறு பேசினார்.
இக்கண்காட்சியில் விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு என்ற தலைப்பில் நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஈஸ்வர்பாலன் முதலிடமும், கோயமுத்தூர் மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் எஸ்.எப்.வி. மேல்நிலைப்பள்ளி மாணவன் பாண்டியன்ராஜன் இரண்டாம் இடமும், மதுரை மாவட்டம் கொட்டாம்ப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் வினோத்ராஜ் முன்றாம் இடமும் பெற்றனர்.
பேரிடர் மேலாண்மை என்ற தலைப்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பி.வி.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்தனா முதலிடமும், தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் யுகேஸ்ராஜ் இரண்டாம் இடமும், விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சிவசங்கரி முன்றாம் இடமும் பெற்றனர்.
உடல் நலம் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி மாணவன் அத்மானந்தன் இந்திரஜூத் முதலிடமும், மதுரை மாவட்டம் நரிமேடு ஜோதி மேல்நிலைப்பள்ளி மாணவன் கேசவன்ரா இரண்டாம் இடமும், விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சிவசங்கரி முன்றாம் இடமும் பெற்றனர்.
கணித கருத்தரங்கில் அரியலூர் மாவட்டம், வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சந்தோசினி முதலிடம் பெற்றார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ்.தரன் இரண்டாம் இடம் பெற்றார். கரூர் மாவட்டம், ஜெகதாபி கே.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி மாணவி கெ.பிரபா மூன்றாம் இடம் பெற்றார்.
ஆசிரியர்களுக்கான அறிவியல் கண்கட்சியில் திருப்பூர் மாவட்டம், கணியூர் எஸ் வி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எம்.கிருஷ்ணமூர்த்தி முதலிடம் பெற்றார். இரண்டாம் இடத்தில் 14 ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளுக்கு பரிசுகளை பெற்றனர்.
இருநபர் ஒரு படைப்பு பிரிவில் திருச்சி மாவட்டம் பெருமாள் பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எம்.திவ்யா மற்றும் ஆர்.பிரியா சௌமியா ஆகிய இருவரும் முதலிடத்தை பெற்றனர். இரண்டாம் இடத்தில் 14 பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் வென்றனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெற்றிக் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கிப்பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரசேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி, கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ) கணேசன், மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, முகன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரேம்குமார் உள்ளிட்ட அலுவலர்கள், ஆசிரியப்பெருமக்கள், ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.