வேளாண் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 20 ஆயிரத்து 383 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் பெய்து வரும் தொடர் மழையால் பருத்தி பயிரில் பாராவாடல் நோய், வேரழுகல் நோய் மற்றும் இலைப்புள்ளி நோய் காணப்படுகிறது.
பருத்தியில் பாராவாடல் நோய் அதிக அளவு மண்ணில் ஈரம் இருப்பதாலும், வடிகால் வசதி இல்லாததாலும் நன்றாக வளர்ந்த பெரிய செடிகளிலும், காய்கள் பிடித்துள்ள செடிகளிலும் இந்நோய் அதிக அளவில் காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த உடன் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் 100 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் கோபால்ட் குளோரைடு என்ற நுண்ணூட்டத்தினை கலந்து தெளிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து 1 சதவீதம் பொட்டாசியம் நைட்ரேட்1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் கலந்து இலைவழியாக கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.
வேரழுகல் நோய் தண்ணீர் தேங்கியுள்ள வயல்களில் அதிக அளவு காணப்படும். பருத்தி பயிரில் வேருக்கு போதுமான அளவு பிராணவாயு கிடைக்காததால், சத்துக்களை மண்ணிலிருந்து எடுக்க முடியாமல் இந்நோய் தடுக்கிறது. இதற்கு காப்பர் ஆக்ஸிகுளோரைடு 50ம நனையும் பவுடர் 3 கிராம் – லிட்டர் தண்ணீர் (அல்லது) கார்பன்டைசிம் 50 சதவீதம் 2 கிராம்-லிட்டர் தண்ணீர் (அல்லது) டிரைபிளோக்ஸிஸ்ரோபின் + டெபுகோனாசால் 0.5 கிராம்-லிட்டர் தண்ணீர் வீதம் இதில் ஏதேனும் ஒன்றைக் கரைத்து வேர் பகுதியில் நன்றாக நனையுமாறு ஊற்றவும்.
இலைப்புள்ளி நோய் ஆல்டர்நேரியா மேக்ரோஸ்போரா என்ற பூசணத்தால் ஏற்படுகிறது. இப்பூசணம் உகந்த சூழ்நிலையில் 50 சதம் வரை விளைச்சல் இழப்பை ஏற்படுத்தக்கூடியது. பருத்தி பயிரின் வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை இல்லாத போது இந்நோய் தோன்றுகின்றது. அதிலும் எப்பொழுது தேவையான அளவு ஊட்டச்சத்து செடிக்கு கிடைக்கவில்லையோ அல்லது எப்பொழுது வயலில் அதிகமான ஈரப்பதம் உள்ளதோ அப்போது நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். அத்துடன், இந்நோய் குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் விரைவாக பரவும் தன்மை கொண்டது. இலைகளில் வட்ட வடிவமான வளையங்களைக் கொண்ட பல புள்ளிகள் தோன்றுவது இந்நோயின் ஆரம்ப அறிகுறியாகும்.
நாளடைவில் பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலைப்புள்ளியின் பரப்பளவு அதிகரித்து இலைகள் பழுப்பு நிறமாக மாறி இலை காய்ந்து விடும். காய்ந்த இலைகள் உதிர்வதால் செடிகளில் இலைகள் இன்றி வெறும் கிளைகள் மட்டுமே இருக்கும். இந்நோய் தாக்கப்பட்ட காய்கள் சரியாக வெடிக்காததுடன் பஞ்சின் தரமும் குறையும். இதனைக் கட்டுப்படுத்த டெபுகோனசோல்(ஸ்கோர்) 200 மிலி-ஏக்கர், புரோபிகோனசோல்(டில்ட்) 200 மிலி-ஏக்கர், ஹெக்சாகோனசோல்(கான்டாப்) 200 மிலி-ஏக்கர், குளோரோதலோனில் (கவாச்) 400 மிலி-ஏக்கர், காப்பர் ஆக்சி குளோரைடு (பைட்டலான்) 500 மிலி-ஏக்கர் இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். இலைப்புள்ளி நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பத்து நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை பயன்படுத்தி பருத்தியில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என மாவட்ட வேளாண்துறை தெரிவித்துள்ளது.