வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மானியத்தில் வழங்கப்பட்ட சூரிய ஒளி கூடார உலர்த்தி மூலம் பழங்களை உலர வைக்கும் பணி
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் (பொ) திரு.மதுசூதன் ஆய்வு செய்தார்.
வேப்பந்தட்டை வட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அன்னமங்கலம் கிராமத்தில் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரம் மானிய உதவியுடன், ரூ.1,68,079 மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசனகருவிகள் அமைக்கப்பட்டு, .மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டிருப்பதை பார்வையிட்டார்.
அதன் அருகாமையில் உள்ள தோட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 2015 – 16 ஆம் ஆண்டிற்கான திட்டத்தில், ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் மானிய உதவியுடன் ரூ.3,97,075 மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி, மற்றும் பழவகைகளை சூரிய ஒளியின் உதவியுடன் உலர்த்தக்கூடிய சூரிய கூடார உலர்த்தியினை நேரில் பார்வையிட்டு, பயனாளி முகிலனிடம் அதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியர் (பொ) மதுசூதனிடம் சூரிய கூடார உலர்த்தியானது, பாலிகார்பனேட் பொருளினால் ஆன மேற்கூரையின் மூலம் சூரிய ஒளியானது அதிக அளவில் கூடாரத்தில் முழுமையாக பரவுகின்றது என பயனாளி முகிலன் தெரிவித்தார்.
மேலும் தரையில் கடப்பா கல் பொருத்தப்பட்டிருப்பதால், அதன் கருமை நிறத்தின் காரணமாக வெப்பம் உள்வாங்கப்பட்டு, அதிகரிக்கின்றது. மேலும் எளிதில் சூடாகக் கூடிய அலுமினிய தட்டின் காரணமாக சூடானது எளிதில் பரவுகின்றது. தற்போது வழைப்பழம், நெல்லிக்காய், பாவற்காய், கத்திரிக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், சேனைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள்; தற்போது சோதனைமுறையில் உலர வைக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.