பெரம்பலூர்: அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகளின் தினவிழாவினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 5 ஆயிரத்து ,205 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், கருப்பு கண்ணாடி, மடக்கு குச்சி மற்றும் காதொலிக் கருவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது இன்று வழங்கினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
கடந்த நான்கரை ஆண்டுகளில் 10 ஆயிரத்து 933 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22.25 கோடி அளவிலான நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தமிழக முதலமைச்சர் பல்வேறு வகையான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்காக கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.22.25 கோடி அளவிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. வேறு எங்கும் இல்லாத அளவிற்கு பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வசதிக்காக 13 பகல்நேர பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் பள்ளிச் செல்லா மாற்றுத்திறனாளி குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு இயன்முறை (பிஸியோ) மருத்துவ பயிற்சிகருவிகள் அமைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் வந்து செல்ல ஆட்டோ வசதி ஏற்ப்படுத்திதரப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு இரண்டு நேரம் பால், பிஸ்கட், தானியவகைகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.
இம்மையங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது, ஏனெனில் ஒவ்வொரு குழந்தையையும் தங்களது குழந்தையாக பாவித்து, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும், கல்வியையும் கற்பித்து வருகின்றனர். மேலும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் பங்கு மிக முக்கியமானது. எனவே அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக உள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அரசின் உதவிகளை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருப்பின் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையின் நகலுடன் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தலாம். மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் மாதாந்திர விளையாட்டு போட்டிகளில் விளையாட விருப்பமுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கு பெற்று தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டும், என பேசினார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் து.ஜெயக்குமார், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சு.இராமக்கிருஷ்ணன், அனைவருக்கும் கல்வித்திட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசன், மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி ஒருங்கிணைப்பாளர் மாலதி, முட நீக்கு வல்லுநர் ஜெயராமன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.