பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வுத் திட்டம் சார்பில் இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாமில் 957 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் மகளிர் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள அப்பல்லோ பார்மஸி, லிமிடெட், ஏ.பி.டி மாருதி, டி.வி.எஸ் லாஜிஸ்டிக், எல் அன் டி லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
காலை 10 மணி முதல் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, 11 மணி முதல் 3 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்களுக்கும், இரண்டாம் தளத்தில் வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியத்தை சேர்ந்த நபர்களுக்கும் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
முகாமில் 18 முதல் 35 வயதுக்குள், 8 ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, பொறியியல், இளங்கலை மற்றும் முதுகலை ஆகி்ய கல்வித் தகுதிகளை கொண்ட 2,371 பேர் பங்கற்றனர். இந்த முகாமில் தேர்வான 957 நபர்களில், முதல்கட்டமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் அளித்தார் பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்செல்வன். இந்த முகாமில், மகளிர் திட்ட அலுவலர் மலர்விழி், புதுவாழ்வு திட்ட மேலாளர் ரூபவேல் கலந்து கொண்டனர்.