தமிழக முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கும் இடம் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
பெரம்பலூர் : தமிழக முதலமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும், ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் தொடங்கப்படும் என்று கடந்த 23.09.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது இன்று எளம்பலூர் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள இடம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க உகந்ததாக கருதப்படும் இடம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கட்டடம் மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்க போதுமான இடங்கள் உள்ளதா என்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இந்த இடம் அமைந்திருப்பதால் மாணவ,மாணவிகள் போக்குவரத்திற்கு பெரிதும் பயனுள்ள பகுதியாகவும் இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின்போது கீழப்பழூவூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அருணாசலம், பெரம்பலூர் வட்டாட்சியர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.