பெரம்பலூர் : பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜேக்டோ அமைப்பில் இணைந்துள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி சங்க ஆசிரியர்களின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் கோ. ராமமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர். ராஜேந்திரன், கி. விஜய நாராயண பெருமாள், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஜேக்டோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிப்பது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்காத உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகங்களின் விவரங்களை மாநில குழுவுக்கு தெரியப்படுத்துவது.
அடுத்தக்கட்ட போராட்டத்தில் தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து நிலை ஆசிரியர்களையும் பங்கேற்க வைப்பது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலை 8.30 மணிக்கு சிறப்பு வகுப்பு எடுக்க கட்டாயப்புத்தும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டிப்பது. போராட்டத்தில் பங்கேற்க விரும்பிய ஆசிரியர்களை மிரட்டிய, தலைமை ஆசிரியர்களின் செயலை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.