பெரம்பலூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் 23 பயனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின்கீழ் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் மற்றும் வேப்பூர் வட்டாரங்களில் உள்ள நீர்வடிப்பகுதி பயனாளிகளுக்கு தார்பாய், விசைத்தெளிப்பான், தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசு மானிய உதவியுடன்கூடிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது வழங்கினார்.
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் வேளாண் உற்பத்தி சார்ந்த பணிகள் திட்டத்தின் கீழ் 90 பயனாளிகளுக்கு ரூ.5.164 லட்சம் மதிப்புடைய காட்டன் தார்பாய்கள், விசைத்தெளிப்பான் மற்றும் வேளாண்கருவிகளும், வாழ்வாதாரப் பணிகள் திட்டத்தின் கீழ் 266 பயனாளிகளுக்கு ரூ.14.749 லட்சம் மதிப்புடைய காட்டன் தார்பாய்கள், விசைத்தெளிப்பான், தையல் இயந்திரம் மற்றும் வேளாண்கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக வேப்பூர், வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் பகுதிகளைச் சேர்ந்த 23 பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தார்பாய்கள், விசைத்தெளிப்பான், தையல் இயந்திரங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.