மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது நேரில் பார்வையிட்டார்
மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது இன்று (28.10.15) உடும்பியம் நீர் வடிப்பகுதிக்கு உட்ப்பட்ட கருங்குட்டையில் ரூ. ஒரு இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குளம் ஆழப்படுத்துதல் பணியையும்,
தழுதாழை நீர்வடிப்பகுதிக்கு உட்ப்பட்ட பகுதியில் ரூ. ஒரு இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய குட்டை பணியையும், தொண்டமாந்துறை நீர்வடிப்பகுதியில் உள்ள ஒடைகளில் 3 தடுப்பணைகள் கட்டப்பட்டு முடிக்கப்பட்ட பணிகளையும் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் -3 மற்றும் 10 -ற்கு ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் புதியதாக குட்டைகள் தோற்றுவிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் 8 குட்டைகளும், பழைய குட்டைகளை தூர்வாரி பலப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் 9 குட்டைகளை தூர்வாரியும், ரூ.ஒரு இலட்சம் மதிப்பீட்டில் ஒரு உலர் களம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மழைக் காலத்தில் வீணாகும் நீரை சேமிக்கும் விதமாக 6 தடுப்பணைகள் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. மேலும் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் 6 வரத்து வாய்க்காலும் தூர்வாரப்பட்டுள்ளன.
நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் அமைக்கப்பட்டு வரும் இத்தகைய திட்டங்களின் மூலமாக மழைக் காலங்களில் பெய்யும் மழைநீரானது, குட்டை மற்றும் ஏரிகளில் பெருமளவு மழைநீர் தேங்கும், இதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்வதுடன் மழை காலங்களில் கால்நடைகளுக்கு தேவையான குடிநீரையும் அளிக்கும். மேலும் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிக்கவும் பேருதவியாக இருக்கும். என அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் செயற்பொறியாளர் (பொ) இராஜேந்திரன், வேளாண்மை துணை இயக்குநர் செந்தமிழ்செல்வன், உதவி செயற்பொறியாளர் நெடுஞ்செழியன் மற்றும் சம்மந்தப்பட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர்களும் உடனிருந்தனர்.