பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் பாக்கியராஜ் மனைவி தனலெட்சுமி ( வயது 30 ).
இவர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 4 ந் தேதி இரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மின்னலும் தாக்கியது.
அப்போது வெண்பாவூரிலிருந்து நெய்குப்பை செல்லும் சாலையில் நான் மற்றும் எனது 2 குழந்தைகளுடன் குடி இருந்த கூரை வீடு தீ பற்றி எரிந்து சாம்பல் ஆனது.
இதில் நானும் எனது குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் உயிர் தப்பினோம். வீட்டிலிருந்த உடமைகளும், 25 மூட்டை மஞ்சள்களும் எரிந்து சாம்பலானது. உடமைகள் அனைத்தையும் இழந்தோம்.
உடனடியாக வேப்பந்தட்டை தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் வந்து இடர்நிதி ரூ.5 ஆயிரம் மற்றும் வேட்டி, சேலை, மண்ணெண்னெய், அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
தற்போது குடியிருக்க வீடு இல்லாமல் அல்லல் பட்டு வருகிறோம்.
எனவே அரசின் சார்பில் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளார்.