பெரம்பலுார் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலுார்–அரியலுார் மாவட்ட மின் ஊழியர் சங்க இடைக்கமிட்டி பேரவை கூட்டம் துறைமங்கலத்தி்ல் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு வட்டக்குழு உறுப்பினர் அகஸ்டின் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறு்ப்பினர் ராஜகுமாரன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அழகர்சாமி துவக்கி வைத்து பேசினார். கூட்டத்தில் மின் ஊழியர் சங்க மாநில ஃப்ராக்ஷன் கன்வீனர் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மின்துறையை தனியாரின் கொள்ளைக்காடாக மாற்றும் வகையில் உள்ள 2014 மின்சார சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், தமிழக மக்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து தனியாரிடம் அநியாய விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்க வேண்டும், தமிழக மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் போராடி பெற்று வெளியாட்டு நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
போதுமான ஊழியர்களை நியமித்து மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும், மின் எரிப்பு கணக்கீட்டை முறைபடுத்த போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் அரசியல் குறுக்கீட்டை கைவிட வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு மின் நுகர்வோரிடமிருந்து கூலி பெறாமல் மின்வாரியமே சம்பளம் வழங்க வேண்டும்
1.12.2015 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவங்கிட தமிழக மின்வாரியத்தை வலியுறுத்துவது, மஸ்துார் பணியாளர்களுக்கு பாதுசாதனங்கள் வழங்க வேண்டும், மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மா.கம்யூ., கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, வட்ட செயலாளர் ராஜாங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் வேல்முருகன், மின் ஊழியர் சங்க மாநில ஃப்ராக்ஷன் உறுப்பினர் ரெங்கராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நிறைவுரையாற்றினார். முடிவில் கிளை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.