படவிளக்கம்: நெய்குப்பையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் நோயாளி ஒருவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்தபோது எடுத்தப்படம். அருகில் நெய்குப்பை மருத்துவ அலுவலர் டாக்டர் வளவன் உள்ளார்.
பெரம்பலூர் : வேப்பந்தட்டையை அருகே உள்ள நெய்க்குப்பை கிராமத்தில் நடைபெற்ற தமிழக முதல்அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமில் ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
நெய்குப்பை அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக முதல் அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட நலப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர். சேரன் தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப்பிரிவினருக்கும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறைகளின் வல்லுநர்கள் சென்னை மற்றும் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைகளிலிருந்து வரவழைக்கப்பட்டு சிகிச்சையளித்தனர்.
இம்முகாமில் மகப்பேறுக்கென்று தனிப்பிரிவு ஸ்கேன் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டது. குழந்தை சிகிச்சைக்குத் தனிப்பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்களை 40 வயதுக்கு குறைவானவர்கள், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பிரித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் சிறப்பு மருத்துவர்கள் மூலம் நடைபெற்றது.
அதில் சிறுநீரகம், எழும்பு மூட்டு, காது, மூக்கு, தொண்டை, கண், பல், கல்லிரல், கனையம், புற்றுநோய் மற்றும் குழந்தையின்மைக்கென தனித்தனி டாக்டர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ முகாமில் மொத்தம் ஆயிரத்து 458 பேர் கலந்துகொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
மேலும் 22 நபர்கள் உடனடியாக கண்புறை அறுவைசிகிச்சைக்கு அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் உயர் சிகிச்சைக்காக தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் வகையில் 62 நோயாளிகள் உயர் மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இம்மருத்துவமுகாமில் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மீனாட்சிசுந்தர், நெய்குப்பை மருத்துவ அலுவலர் டாக்டர் வளவன், சுகாதார மேற்பார்வையாளர் கங்காதர் மற்றும் அரசு மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு சிகிச்சையளித்தனர்.
மேலும் இம்முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் நெய்குப்பை மகேஸ்வரன், தொண்டப்பாடி பிச்சைபிள்ளை, ஒன்றிய கவுன்சிலர் பச்சையம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.