20150819030541

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி, பெரம்பலூர், அரியலூர் உட்பட 15 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.

பெரம்பலூரில் ஆ. ராசா, அவரது நண்பரான தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்ஷா ஆகியோரது வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைகளில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசா. இவரது பதவி காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது.

இதனால் மத்திய அரசுக்கு ரூ1 லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்த தகவல் நாட்டில் பெரும் பிரளயத்தை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. ஓராண்டு காலம் திகார் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் ஆ. ராசா வெளியே வந்தார்.

இதேபோல் ஸ்வான் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி பணம் கைமாறியது தொடர்பாகவும் ஆ. ராசா மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள் மீது தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந் நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது புதிய வழக்கை சி.பி.ஐ. தொடர்ந்துள்ளது.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!