பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு, மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் அங்காடி விற்பனையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் அங்காடி விற்பனையார்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும். அங்காடி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் வி. கணேசன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலர் சி. பிரபாகரன், பொருளாளர் கே. ஆனந்தன், துணைத் தலைவர்கள் எஸ். கோவிந்தசாமி, வி. அன்பழகன், இணைச் செயலர்கள் டி. சம்பத், ஜி. முத்துவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை இன்று முதல் கூட்டுறவு கடன் சங்க பணியளர்கள் மற்றும் அங்காடி விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 163 அங்காடியில் பணிபுரியும் விற்பனையாளர்களும், 53 கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களும் என 400 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.