புரசைவாக்கத்தில் அமைய உள்ள மெட்ரோ ரெயில் பாதை திட்டத்தை மாற்றாவிட்டால் பெரும் போராட்டத்தில் மக்கள் ஆதரவுடன் குதிப்போம் என வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து தற்போது நடைபெற்று வருகிறது.மெட்ரோ ரெயிலுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு ஏற்பட்டு இருப்பதால் சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் பாதையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி மாதவரம்-சோழிங்கநல்லூர் மற்றும் நெற்குன்றம்- விவேகானந்தர் இல்லம் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
அதில் மாதவரம்-சிறுசேரிக்கு அமைக்கப்பட உள்ள வழித் தடப்பாதை பெரம்பூர்-அயனாவரம், ஓட்டேரி-புரசைவாக்கம் வழியாக கெல்லீஸ் நோக்கி செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த வழித்தட பாதையால் புரசைவாக்கம் பகுதியை சுற்றி உள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே அந்த வழித்தட பாதையை மாற்ற புரசைவாக்கம்- வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா தனியார் நிறுவனம் ஒன்றின் நலனுக்காக புரசை வியாபாரிகள் நசுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். பல லட்சம் ரூபாய் கொடுக்கல் வாங்கல் கொண்ட நிலையில் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தில் தலையிட்டு அவர்களை அச்சத்தில் ஆழ்த்துவது எந்தவகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார். மீண்டும் பழைய வழித்தடத்தில் ரயில்பாதை அமைக்கப்படவேண்டும் என்பதே தங்களின் வேண்டுகோள் என்றும் இதனை மீறும் பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி போராட்டக்களத்தில் இறங்குவதுடன் சட்டபோராட்டகளுக்கும் ஆயத்தமாவோம் என எச்சரிக்கை விடுத்தார்.