பெரம்பலூர். வாலிகண்டபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சந்தைக்கு பூவிற்க சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கணவன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 50). இவரது மனைவி வீரம்மாள் (45). இருவரும் ஊர் ஊராக நடக்கும் சந்தைகளில் சென்று பூவிற்கும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை வாலிகண்டபுரத்தில் நடைபெறும் சந்தையில் சென்று பூ விற்பதற்காக கணவன்இ மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பெரம்பலூரிலிருந்து புறப்பட்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வாலிகண்டபுரம் கருப்பையா கோவில் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று மறைந்து விட்டது.
இதில் மோட்டார்சைக்கிள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே வீரம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக நெடுசாலை ரோந்து போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த பரமசிவத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடா;பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.