பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
2015-2016-ஆம் ஆண்டிற்கான ராஜீவ்காந்தி கேல் அபியான் (ஆ.ஜி.கே.ஏ.) திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் டிச 15 அன்று காலை 9.00 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
தேசிய அளவிலான தேர்வுப் போட்டியில் தமிழக அணி பங்கேற்க உள்ளது. மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டியில் 16 வயதுக்குட்பட்ட சிறந்த வீரர்,வீராங்கனைகளை தேர்வு செய்யும் பொறுக்குத் தேர்வு வரும் 15.12.2015 அன்று காலை 9.00 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் ஆண், பெண் இருபாலாருக்கும் தடகளம் (100 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 3000 மீ) ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், 4 x 100 மீ தொடர் ஓட்டம், கால்பந்து, கபாடி, கோ-கோ, வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், டேக்-வான்-டோ, ஜீடோ, வில்வித்தை, கைப்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகிய விளையாட்டுக்களுக்கு பொறுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. மேற்கண்ட விளையாட்டுகளில் சிறந்த இரு வீரர்கள், மற்றும் இரு வீராங்கனைகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு மாநில அணிக்கு அனுப்பி வைக்கப்படுவர். இப்போட்டிகளில் பங்கேற்க 31.12.2015 அன்று 16 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
எனவே விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் இத்தேர்வு போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம், என அவர் அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.