பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே செவ்வாய்க்கிழமை இன்று இரவு மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள உடும்பியம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலை மகன் ரஜினி (35) விவசாயி. இவர், செவ்வாய்க்கிழமை இரவு உடும்பியத்திலிருந்து கள்ளப்பட்டி கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கள்ளப்பட்டியிலிருந்து உடும்பியம் நோக்கி சென்ற லோடு ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த ரஜினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த அரும்பாவூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, ரஜினியின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.