வரலாற்று புராதானங்கள் புதைந்து கிடக்கும் கொளக்காநத்தம் அருகே விவசாய நிலத்தில் 10 அடி ஆழ பள்ளம் !! சுரங்கப்பாதையா ? பொதுமக்கள் திரண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தம் அணைப்பாடி சாலையில் உள்ள விவசாய ஒருவரின் நிலத்தில் 10 அடி ஆழமுள்ள ஒரு பள்ளம் தெரிந்தது. அதன் வழியாக ஏதாவது சுரங்கப்பாதை செல்கிறதா ? என பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்து அதிசயித்த வண்ணம் உள்ளனர்.
ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தம் அருகேயுள்ள அணைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை மகன் ராமசாமி. இவரது விவசாய நிலம் கொளக்காநத்தம் – அணைப்பாடி சாலையோரத்தில் உள்ளது. அவருடைய நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் மருதமுத்து குத்தகைக்கு விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த நிலத்தை டிராக்டர் மூலம் உழவுப் பணி மேற்கொண்டார்.
தற்போது ஆடி மாதம் பிறந்து மழை பெய்யத் தொடங்கியதால் பருத்தி பயிரிடுவதற்ககாக நிலத்தில் இருந்த சில மரக்கன்றுகளை நேற்று வெட்டி எடுத்துள்ளார். அப்போது நிலத்தில் ஒரு இடத்தில் திடிரென ஓர் பள்ளம் ஏற்பட்டது. இதனையறிந்த அக்கம்பக்கம் உள்ள விவசாயிகள் அந்த பள்ளத்தை பார்த்து விட்டு அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். அதனால் இந்த தகவல் அருகில் உள்ள கொளக்காநத்தம், அணைப்பாடி, அயினாபுரம் உள்ளிட்ட கிராம மக்களுக்கு பரவியது.
அதனால் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்ட வண்ணம் உள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ராமசாமி, ஆலத்தூர் தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் பாக்யராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு சென்றனர்.
சுமார் 2 அடி சுற்றளவு உள்ள அகலம் உள்ள ஓட்டையில் சுமார் 10 அடி ஆழம் கொண்ட பள்ளம் தெரிகிறது. அதில் 2 அடிக்கு கீழ் அகலமாக உள்ளது. எவ்வளவு அகலம் உள்ளது என தெரியவில்லை. இதன் வழியாக ஏதாவது சுரங்கப்பாதை ஏதாவது இருக்குமோ ? என பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் (நாளை) ஆய்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பள்ளத்தில் யாரும் தவறி விழுந்த விடாமல் இருக்க மருவத்தூர் உதவி ஆய்வாளர் சத்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கொளக்காநத்தம் பகுதியானது வரலாற்று புராதான சின்னங்கள் புதைந்து கிடக்கும் பூமியாகும். இங்கு ஏற்கனவே 12 கோடி ஆண்டு பழமை வாய்ந்த கல்மரம், டைனோசர் முட்டை, அதன் படிமங்கள் என வரலாற்று அதிசயங்களை தக்க வைத்துள்ள மாறுபட்ட பிரமேசம் என்பது குறிப்பிடத்தக்கது.