தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பா.ம.க போட்டி: வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெரம்பலூரில், நாம் விரும்பும் அன்புமணி எனும் கையேட்டை இன்று வெளியிட்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் தகுதி, திறமை குறித்த தகவல்களை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகரம், கிராமம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று விநியோகம் செய்யப்படும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் தகுதியானவரை பொதுமக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளை மட்டுமே கூட்டணியில் சேர்த்துக்கொள்ளப்படும். திமுக, அதிமுகவை தவிர மற்ற கட்சியுடன் கூட்டணிக்கு வந்தாலும் வரவேற்போம். தமிழகத்தில் பாமகவிற்கு 25 லட்சம் வாக்கு வங்கி உள்ளது. வாக்குகளுக்காக பணம், மது, இலவசங்கள் தரமாட்டோம். பாமக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். இதில், 120 தொகுதிகளில் வெற்றிபெறும்.
பாமக ஆட்சி அமைத்தால் தமிழக மக்களுக்கு கல்வி, மருத்துவம், விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். மேலும், வேலைவாய்ப்புகள், தொழில் கற்றுக்கொடுக்கப்படும். பாமகவின் பொதுக்குழுவால் முடிவுசெய்யப்பட்டு, கடந்த பிப். 15 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பாமக முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். பாமக ஒரு முறை ஆட்சி அமைக்க தமிழக மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். ஆட்சி அமைத்தால், பாமகவின் தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களை 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். நிறைவேற்றவில்லை எனில் பதவியை விட்டு விலகி விடுவோம்.
மீத்தேன் வாயுதிட்டம் நிறைவேற்றப்பட்டால் 1.64 லட்சம் ஏக்கர் நிலம் பாதிக்கப்படுவதோடு, பாலைவன பகுதிகளாக மாறிவிடும். எனவே, மீத்தேன் வாயு திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும், ஜல்லிகட்டு நடத்தவேண்டுமென அன்புமணி பிரதமர் நரேந்திரமோடியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். எனவே, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் 50 ஆண்டு காலமாக திமுக, அதிமுக மாறி, மாறி ஆட்சி செய்து நாடு சீரழிந்து விட்டது. சென்னையில் நீர்வளப் பகுதிகளான ஏரி, குளம் இருந்த பகுதிகளில் உள்ள கூரை வீடுகளை தான் அரசு இடிக்கிறது. ஏரி, குளம் மற்றும் நீர்வள ஆதாரப்பகுதி புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களின் கட்டடங்கள் இடிக்கப்பட வில்லை.
தமிழகத்தில் சர்வதிகார ஆட்சி நடைபெறுகிறது. மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு இதுவரை முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிடாதது மக்களின் மீது அக்கரை இல்லாததையே காட்டுகிறது. மதுபோதையில் உளறும் தேமுதிக தலைவருடன் பிரதான கட்சிகள் கூட்டணி வைக்க முயற்சிக்கிறது என்றார் அவர்.
தொடர்ந்து, புறநகர் பேருந்து நிலையத்தில் துண்டறிக்கைகளை விநியோகம் செய்தார் ஜெ. குரு. இந்நிகழ்ச்சியின்போது, மாநிலத் துணை பொதுசெயலர் வைத்திநாதன், மாவட்ட செயலார் செந்தில்குமார், கண்ணபிரான், நகர செயலாளர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் பிரபு, செய்தி தொடர்பாளர் வடமலை மற்றும் கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.