பெரம்பலூர்: வாகன ஓட்டுநர்கள் தங்களது உயிரை பாதுகாக்க தலைகவசம் அணிவது அவசியம் என வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் பெரம்பலூரில் நடைபெற்ற விலையில்லா தலைக்கவசம் வழங்கும் விழாவில் தெரிவித்தார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், வாகன ஓட்டுநர்களுக்கு விலையில்லா தலைக்கவசம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில், வாகன ஓட்டுநர்களுக்கு விலையில்லா தலைக்கவசம் வழங்கிய அமைச்சர் மேலும் பேசியதாவது:
தமிழக மக்களின் நலன் கருதி அரசு சார்பில் விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளின் உயிரை காக்க வேண்டும் என்பதற்காக விலையில்லா தலைகவசம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். உயிரை காப்பது தலைகவசம். ஆனால், பொதுமக்களையும், தொண்டர்களையும் காப்பது முதல்வர் ஜெயலலிதா. ஒவ்வொருவரின் உயிரும் விலை மதிப்பற்றது. அதை பாதுகாக்க வாகன ஓட்டிகள் அனைவரும் வெல்மெட் அணிய வேண்டும் என அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் பேசினார்.
முன்னதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் விலையில்லா ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். இதில், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என 500 பேருக்கு விலையில்லா ஹெல்மெட் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா (பெரம்பலூர்), மா. சந்திரகாசி (சிதம்பரம்), பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலர் மா. ரவிச்சந்திரன், நகர செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ. சகுந்தலா, துணைத் தலைவர் என். சேகர், ஒன்றியக்குழுத் தலைவர்கள் து. ஜெயக்குமார், என். கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலர்கள் என்.கே. கர்ணன், பி. கிருஷ்ணசாமி, எஸ். கண்ணுசாமி, மாவட்ட அணி செயலர்கள் எம்.என். ராஜாராம், வழக்குரைஞர் குலோத்துங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.